காவலர் தேர்வு எழுத வந்த பெண்ணுக்கு பிரசவத்தில் ஆண் குழந்தை
காளிகா
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரியத்தின் மூலம் நடத்தப்படும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத்தேர்வு 2023 நேற்று நடந்தது, இந்த தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 தேர்வு மையங்களில் 9167 மாணவ மாணவியர் தேர்வு எழுதினர்.
திருவண்ணாமலை அடுத்த கீரனூர் அருகில் செயல்பட்டு வரும் சன் ஆர்ட்ஸ் & சயின்ஸ் கல்லூரியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வு எழுதிய அண்டம்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான பெண்மணி காளிகா என்பவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது, இதனைத்தொடர்ந்து தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் மூலம் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பெண்மணியை பரிசோதனை செய்து உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்,
ஆனால் காளிகா வலியை பொறுத்துக் கொண்டு தேர்வை எழுதி முடித்து விட்டு வருகிறேன் என்று சொல்லியுள்ளார். செய்வதறியாத திகைத்த காவலர்கள் 108 ஆம்புலன்ஸ் எந்த நிலையிலும் தயாராக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர், சிறிது நேரத்திலேயே பிரசவ வலி அதிகரிக்கவே காளிகாவால் ஒன்றும் செய்ய முடியாமல் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட காளிகாவுக்கு அடுத்த ஒரு மணி நேரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்த காளிகாவுக்கு அரசு வேலையில் சேர வேண்டும் ,காவல்துறையில் சேர்ந்து சமூக தொண்டாற்ற வேண்டும் என்று எண்ணிய காளிகா கருவுற்றிருந்தாலும் ,மனம் தளராமல் மிகுந்த முயற்சி எடுத்து தேர்வுக்காக பயிற்சி எடுத்ததாகவும், இந்த சூழ்நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட காளிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. காளிகாவின் குடும்பத்தினர் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, காளிகாவின் கணவர் பெயிண்டர் தொழில் செய்து வருகிறார்.