திண்டிவனம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து
விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் மிகப்பெரிய மையப் பகுதியாக செயல்பட்டு வருகிறது. சென்னை திருச்சி புதுச்சேரி திருவண்ணாமலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் இணைக்கும் இடமாக திண்டிவனம் திகழ்ந்துவரும் நிலையில் திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் செல்வதற்கு நீண்ட நேரமாக பேருந்து இல்லாமல் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வேலைக்கு சென்று வந்தவர்கள் பேருந்து நிலையத்தில் காத்திருந்தனர்.
அப்பொழுது சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லக்கூடிய அரசு பேருந்து ஓட்டுனர் மட்டுமே இயக்கி வரும் பேருந்து வந்தது. அப்போது திண்டிவனம் பணிமனையின் சார்பாக திண்டிவனத்தில் நடத்துனர் பேருந்தில் பயணச்சீட்டு கொடுத்துவிட்டு இறங்கி விடுவார். பின்னர் பேருந்து புறப்படும் ஆனால் இன்று திண்டிவனம் பணிமனையின் சார்பாக இருக்கக்கூடிய நடத்துனர் இல்லாததால் சென்னையில் இருந்து விழுப்புரம் சென்ற அரசு பேருந்து பயணிகளை ஏற்றாமல் ஓட்டுநர் பொதுமக்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
குறிப்பாக சென்னையில் இருந்து விழுப்புரம் சென்ற அரசு பேருந்து காலியாக இருந்த நிலையில் அங்கிருந்த பொது மக்களை ஏற்றிச் செல்லாமல் நடத்துனர் இல்லை என காரணம் காட்டி பேருந்து காலியாகவே விழுப்புரம் சென்றது. இது போன்ற சூழ்நிலையால் தான் போக்குவரத்து துறை நஷ்டத்தை ஈடுபட்டு வருகிறது.
இதற்கு முழு காரணம் போக்குவரத்து நிர்வாகத்தின் ஊழியர்கள் தான் என பொதுமக்கள் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.