கருங்கலில் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய அரசு பஸ்
குமரி மாவட்டம் ,கருங்கலில் இருந்து நாகர்கோவில் செல்லும் தடம் எண் 9 ஏ என்ற அரசு பஸ் நேற்று காலையில் கருங்கலில் இருந்து சுமார் 50 பயணிகளுடன் நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் பெண்கள் இருந்தனர். பஸ் கருங்கலை தாண்டி கருமா விளை என்ற பகுதியில் செல்லும் போது திடீரென பிரேக் செயலிழந்தது. டிரைவர் பஸ்சை நிறுத்த எவ்வளவோ முயற்சி செய்தும் நிறுத்த முடியவில்லை. பஸ்ஸில் இருந்தவர்கள் கூச்சலிட்டனர்.
இதையடுத்து இதை கண்டு பைக்கில் பயணம் செய்தவர்கள் நிலைமை உணர்ந்து பஸ்ஸில் முன்னே சென்று எதிரே வந்த வாகனங்களை ஒதுக்கி அனுப்பினர். மேலும் கல், மரக்கட்டை, டயர் போன்றவற்றை சாலையில் போட்டு பஸ்ஸை நிறுத்த முயன்றனர். ஆனாலும் பஸ் நிற்கவில்லை. சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ஒரு மண் திட்டில் மோதி டிரைவர் சாதுரியமாக பஸ்சை நிறுத்தினார்.
உடனடியாக அருகில் நின்றவர்கள் டயர் மற்றும் கற்களை போட்டு பஸ் பின்னோக்கி நகர்ந்து செல்லாதவாறு தடுத்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த அபசம்பாவிதமும் நடக்கவில்லை. பின்னர் அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் வந்து பழுதை சரி செய்து பஸ்ஸை எடுத்துச் சென்றனர். பஸ்ஸில் இருந்த பயணிகள் வேறு பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்போகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.