தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பட்டதாரி பெண்
பைல் படம்
சேலத்தை சேர்ந்த 28 வயது தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கும், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவருக்கும் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது. நேற்று ஏற்காடு அடிவாரம் அறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளை இரு வீட்டாரும் தடபுடலாக செய்து இருந்தனர். மாலையும் கழுத்துமாக மணமகனும், மணமகளும் மணமேடைக்கு வந்தனர். அய்யர் மந்திரம் சொல்லி கொண்டு இருந்தார். தாலி கட்டுவதற்கு மணமகன் ஆயத்தமானார்.
அப்போது திடீரென மணமகள் மணமேடையில் இருந்து எழுந்து தனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என கூறினார். இதனால் மணமேடையை சுற்றி நின்ற இருவீட்டாரும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். மணமகன் ஏன் பிடிக்கவில்லை என்று காரணம் கூற அந்த பெண் மறுத்து விட்டார். இதனால் அங்கு இரு வீட்டாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் மணப்பெண்ணிடம் விசாரணை நடத்தி அறிவுரை கூறினர். அப்படி இருந்தும் மணமகள் தனக்கு மாப்பிள்ளை வேண்டாம் என்பதில் உறுதியாக இருந்தார். உடனே போலீசார் இரு தரப்பையும் தகராறு செய்யக்கூடாது என்று கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அறுபடை முருகன் கோவிலில் நேற்று சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.