மருதமலை கோவில் படிக்கட்டில் முகாமிட்ட யானைகள் கூட்டம்
கோவை:மேற்கு தொடர்ச்சி மலையில் நிலவும் கடும் வறட்சி மற்றும் உணவு பற்றாக்குறை காரணமாக யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி அருகில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் வீட்டில் வைத்திருக்கும் அரிசி மற்றும் தீவனங்களை சாப்பிடுவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.கடந்த சில நாட்களாக கரடிமடை,தீத்திபாளையம் பகுதிகளில் சுற்றி வரும் யானைகள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை மாதம்பட்டி வழியாக,ஓனாப்பாளையம் யானை மடுவு வனப்பகுதிக்குள் சென்றது.
இந்நிலையில் அங்கிருந்து வெளியேறிய யானைகள் வடவள்ளி அடுத்த மருதமலை அடிவார பகுதிக்கு வந்த யானைகள் கோவிலுக்கு செல்லக்கூடிய மலை படிக்கட்டில் முகாமிட்டது.அங்கிருந்த தொட்டியில் தண்ணீர் பருகிய யானைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக அப்பகுதியில் முகாமிட்டதால் பக்தர்களின் பாதுகாப்பு கருதி படிக்கட்டு வழியாகவும் மலை பாதை வழியாக வாகனங்களில் செல்ல வனத்துறையினர் அனுமதி மறுத்தனர்.சுமார் இரண்டு மணி நேரம் கழித்து 14 யானைகளும் மலை பாதையை கடந்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.யானை கூட்டம் படிக்கட்டில் முகாமிட்டதால் மலை மேல் கோவிலுக்கு சென்ற பக்தர்களும் அடிவாரத்தில் கோவிலுக்கு செல்ல இருந்த பக்தர்களும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்ததால் மலை அடிவாரப் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
வனத்துறையினர் துரித நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர். எனினும் இரவு நேரம் ஆனதால் பெரும்பாலான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விட்டு சாமி தரிசனம் செய்யாமலேயே வீடு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர். படிக்கட்டில் இருந்த யானைகள் மலை பாதையை கடந்து வனப்பகுதிக்குள் செல்லும்போது அங்கிருந்த பக்தர்கள் கூச்சலிட்டதால் கூட்டத்தில் இருந்த யானை பிளிரவே அங்கிருந்த பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.