ரேஷன் கடையை அதகளம் செய்த யானை கூட்டம்

ரேஷன் கடையை அதகளம் செய்த யானை கூட்டம்
ரேசன் கடையை சூறையாடிய யானை கூட்டம்.

கோவை மாவட்டம் பேரூர் அடுத்த தீத்திபாளையம் கிராமம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ளது.கேரளா வனப்பகுதியும் தமிழக வனப்பகுதியும் இணையும் இடத்திற்கு அருகே இந்த கிராமம் உள்ளதால் தமிழக வனப் பகுதியில் இருந்து கேரள வனப்பகுதிக்கும் கேரள வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்கும் ஏராளமான யானைகள் வலசை செல்கின்றன.

அவ்வாறு வரும் இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் புகுந்து விளை பயிர்களை சேதப்படுத்துவதாக தொடர்ந்து விவசாயிகள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய எட்டு யானைகள் கொண்ட கூட்டம் கிராமத்திற்குள் புகுந்தது அதிகாலை யானைகள் புகுந்ததாக செய்தி பரவியதை அடுத்து மதுக்கரை வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.

இதனிடையே ஊருக்குள் புகுந்த யானைகள் அங்கு இருந்த ரேஷன் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே இருந்த அரிசி,பருப்பு, சர்க்கரை மூட்டைகளை வெளியே எடுத்து போட்டு சாப்பிட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து அங்கு திரண்ட பொதுமக்கள் வனத்துறையினர் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தற்போது இந்த பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளதாகவும் இரவு நேரங்களில் உணவு மற்றும் தண்ணீர் தேடி இந்த யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வருவது தொடர்வதாகவும் அவ்வாறு ஊருக்குள் வரும் யானைகளால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதால் யானைகள் ஊருக்குள் வராமல் இருக்கும் வகையில் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த யானைகள் கூட்டம் வாழை மற்றும் தக்காளிகளை சேதப்படுத்தியுள்ளதாகவும் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான விளை பயிர்கள் சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story