கோவில் படையலில் வைத்திருந்த மது குடித்த தொழிலாளி சாவு

கோவில் படையலில் வைத்திருந்த மது குடித்த தொழிலாளி சாவு
உயிரிழந்த செல்வகுமார்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் கோவில் படையலில் வைத்திருந்த மது குடித்த தொழிலாளி மரணமடைந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் வைத்தியநாதபுரம் பகுதியில் உள்ள ஒரு கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவின் போது சுவாமிக்கு மது பாட்டில்களுடன் படையல் செய்ததாக தெரிகிறது. பூஜைகள் முடிந்ததும் படையலில் வைக்கப்பட்ட மதுவை பூசாரி பிரசாதமாக சிலரிடம் கொடுத்துள்ளார்.

அதனை அதே பகுதியை சேர்ந்த செல்வகுமார், வடலி விளை பகுதியை சேர்ந்த அருள் ஆகியோர் பெற்றுக் கொண்டு அருகே உள்ள ஒரு சுடுகாட்டு பகுதி சென்று குடித்துள்ளனர். சிறிது நேரத்தில் அருள், தனது நண்பர்களுக்கு மது குடித்தவுடன் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக கூறி போன் செய்துள்ளார். உடனே வந்து தன்னை காப்பாற்றவும் கூறியுள்ளார். நண்பர்கள் சென்று பார்த்தபோது, அருள் மயக்க நிலையில் இருந்துள்ளார்.

செல்வகுமார் பேச்சு மூச்சு இன்றி கிடந்துள்ளார். அவர்களை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் நண்பர்கள் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். அருளின் உடல் நலம் மோசமாக உள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோட்டார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல் பரிசோதனைக்கு பிறகு செல்வகுமார் எப்படி இறந்தார் என்று விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story