மயான சூறையாடுதல் விழாவில் பங்கேற்ற திரளான பக்தர்கள்

குமாரபாளையத்தில் மகா சிவராத்திரி  மயான சூறையாடுதல்,விழாவையொட்டி பக்தர்கள் பெருமளவில் திரண்டு வழிபட்டனர்.  

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தட்டான்குட்டை மயான பெரியாயி அம்மன், அங்காளம்மன் கோவிலில் மகா சிவராத்திரி மயான சூறையாடுதல், மகா குண்டம் விழா பிப். 24ல் முகூர்த்தக்கால் நடுதல், பூச்சாட்டு விழாவுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காவிரி ஆற்றிலிருந்து மேளதாளங்கள் முழங்க பால் குடம், தீர்த்தக்குடம் எடுத்து வரப்பட்டது. இதில் பெண்கள் அக்னி சட்டி எடுத்தவாறும், அலகு குத்தியவாறும் வந்தனர். கணபதி ஹோமம், விளையாட்டு பெரியாண்டிச்சி அம்மன் கண் திறப்பு விழா, காடுகட்டும் விழா ஆகியன நடந்தன. நேற்று மயானத்திலிருந்து காட்டேரி அழைத்து வருதல், மயானத்திலிருந்து மாசானம் புறப்படுதல், பெரியாண்டிச்சி அம்மனுக்கு தாலாட்டு விழா நடைபெற்றது.

மாசாணி அம்மன் வேடமணிந்த நபர் வாயில் கோழி, ஆடு ஆகியவற்றை கடித்தவாறு வந்தது காண்போரை அதிர்ச்சியடையவைத்தது. ராஜம் தியேட்டர் பகுதியிலிருந்து பவர் ஹவுஸ் மயான காளி கோவில் வரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. சேலம், சங்ககிரி, திருச்செங்கோடு உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் ஆனங்கூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டன. கூடிய கூட்டத்தை குமாரபாளையம் போலீசார் கட்டுப்படுத்தினர்.மார்ச். 12ல் மகா குண்டம் பூ மிதித்தல் நடைபெறவுள்ளது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி தங்கள் வேண்டுதல் நிறைவேற்றிட மஞ்சள் ஆடை அணிந்தவாறு விரதம் இருந்து வருகின்றனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

Tags

Next Story