பக்ரீத் சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
சிறப்பு தொழுகை
பக்ரீத் பண்டிகை, உலக அளவில் முஸ்லீம் சமூகத்தினரால் முக்கிய பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை, ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த பக்ரீத் பண்டிகைக்கு ஆடு, மாடு, ஒட்டகம் என வாங்கி பலியிட்டு,அவர் அவர்கள் வசதிக்கேற்ப ஏழைகளுக்கு தானமாக வழங்கி பக்ரீத்தை கொண்டாடுவர்.
இன்று 17ம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் பேட்டை அஞ்சுமனே ஜாமியா பள்ளி வாசலில் இருந்து காலை 7 மணிக்கு முத்தவல்லி - ஐக்கிய ஜமாத் பேரவை தலைவர் தவுலத்கான் தலைமையில், திரளான முஸ்லீம் சமூகத்தினர் ஊர்வலமாக புறப்பட்டு, மெயின்ரோடு வழியாக, சேலம் ரோட்டில் அமைந்துள்ள ஈத்கா மைதானத்தை சென்றடைந்தனர். தொடர்ந்து ஈத்கா திடலில் ஈதுல் அஜ்ஹா சிறப்பு தொழுகை காலை 7.30 மணிக்கு நடைபெற்றது.
ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் சாதிக்பாஷா பக்ரீத் சிறப்பு தொழுகையை நடத்தினார். இந்த சிறப்பு தொழுகையில் 2000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்த பிறகு அனைவரும் ஒருவருக்கொருவர் பக்ரீத் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். ஜாமியா பள்ளி வாசல் துணை தலைவர் பாரூக்பாஷா, செயலாளர் நியாமத், மூத்த உறுப்பினர் முகமது அலி உள்ளிட்டோர் தொழுகையில் கலந்துகொண்டனர்.