வைரஸ் நோய் தாக்கிய சிறுத்தை குட்டி பலி
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் சிலோன் காலணி குடியிருப்பில் அரசு தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கான கழிப்பறைகள் வீட்டிற்கு வெளியே சற்று தள்ளி வரிசையாக கட்டப்பட்டுள்ளன. கடந்த 31-ஆம் தேதி கழிப்பறை அருகே விறகுகளை அடுக்கி வைக்கும் கொட்டகையில் போடப்பட்ட தார்ப்பாயில் சிறுத்தை குட்டி ஒன்று சிக்கி ஓட முடியாமல் இருந்தது.
தகவல் அறிந்து மாவட்ட வன ஊழியர்கள் விரைந்து சென்று சிறுத்தை குட்டியை மீட்டனர். 4 மாதம் வயதுடைய சிறுத்தை குட்டி மிகவும் சோர்வாக உணவு எடுக்க முடியாத நிலையில் இருந்தது. தொடர்ந்து சிறுத்தை குட்டியின் இரத்தம் மற்றும் அதன் உமிழ்நீர் சோதனைக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதில் சிறுத்தை குட்டிக்கு கெனைன் டிஸ்டம்பர் வைரஸ் நோய் தாக்குதல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து நாகர்கோவிலில் வன அலுவலகத்தில் உள்ள வன கால்நடை மருத்துவர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிறுத்தை குட்டி இறந்தது. இதை அடுத்து மாவட்ட வன அலுவலர் மற்றும் களக்காடு வன கால்நடை மருத்துவர் முன்னிலையில் உடல் கூறாய்வு செய்யப்பட்டு பேச்சிப்பாறை ஜீரோ பாயிண்ட்டில் உள்ள கேம்ப் அலுவலகத்தில் எரியூட்டப்பட்டது.