கடமை தவறிய தமிழக அரசுக்கு பாடம் புகட்டணும்: ஜி.கே வாசன்
தமிழகத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல், தமிழகத்தில் தற்போது தாக்கி வரும் வெயிலைப் போலவே சூடு பிடிக்க துவங்கியுள்ளது. கரூர் பாராளுமன்ற தொகுதியில், பிஜேபி சார்பாக போட்டியிடும் செந்தில் நாதனுக்கு ஆதரவு கேட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜிகே வாசன் இன்று கரூர் அடுத்த புலியூர் பஸ் ஸ்டாப் பகுதியில் திறந்த ஜீப்பில் நின்றவாறு பிரச்சாரம் மேற்கொண்டார்.
அருகே வேட்பாளர் செந்தில்நாதன் உடன் இருந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொது மக்களிடம் பேசிய ஜி கே வாசன், நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் பொதுமக்கள்.அந்த வகையிலே நமது வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி என தெரிவித்த அவர், நீங்கள் செலுத்தும் ஒவ்வொரு வாக்கும், உண்மையானதாகவும்,பிரயோஜனம் உள்ளதாகவும் இருக்க வேண்டும்.
அப்போதுதான் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்றார். பிரதமர் மோடி தலைமையிலான அரசில் பெண்களுக்கு அதிகப்படியாக கடன் வழங்கியுள்ளார்கள். மேலும், மகளிர்க்கு பெருமை சேர்க்கும் வகையில் கடந்த ஐந்து நாட்களுக்கு முன்பு 100 நாள் வேலை திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 319 ரூபாய் கூலியாக உயர்த்தி வழங்கி உள்ளார். கரூர், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, திண்டுக்கல், பழனியை இணைக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும். மத்திய அரசிடம் கேட்டு இந்த பணியை மேற்கொள்ள வேண்டிய கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மீது குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருக்கிறது. கொலை, கொள்ளை, திருட்டு, செயின் பறிப்பு ஒருபுறம் மறுபுறம் இளைஞர்கள் இடையே கஞ்சா என்றால் பெற்றோர்கள் பீதியில் இருக்கிறார்கள். இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியது தமிழக அரசின் கடமை கடமை தவறிய அரசுக்கு பெற்றோர்கள் சரியான பாடம் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என கூறினார்.