சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற ஆயுள் தண்டனை கைதி சாவு
உயிரிழப்பு
சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 44). இவர், ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று கடந்த 2018-ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு கடந்த 2021-ம் ஆண்டு அவரது உறவினர்களை சந்தித்து பேச வேண்டும் என்ற அடிப்படையில் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார். அதன்பிறகு சிறையில் அவரை உறவினர்கள் அவ்வப்போது பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த மாதம் 25-ந் தேதி கைதி பழனிசாமிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிறைக்காவலர்கள் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி கைதி பழனிசாமி திடீரென உயிரிழந்தார். மஞ்சள் காமாலை நோயால் அவர் அவதிப்பட்டு வந்ததாகவும், அதன் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும், அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவரது இறப்பு குறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.