கறவை மாட்டுக்கடன் மேளா: ஆட்சியர் தகவல்
கறவை மாடு கடன் மேளா
தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை அதிகரிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு கறவை மாட்டுக்கடன் ஃபெடரல் வங்கி மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு இன்று மாபெரும் கறவை மாட்டுக்கடன் வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆவின் ஒன்றிய பொது மேலாளர், துணைப்பதிவாளர் (பால்வளம்), முதுநிலை ஆய்வாளர்கள், விரிவாக்க அலுவலர்கள் மற்றும் ஆவின் அனைத்து பிரிவு அலுவலர்களும் கலந்து கொண்டனர். இந்த லோன் மேளாவில் குறைந்த வட்டியில் கடன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விஜயராமபுரம், தெற்கு காரசேரி, வடக்கு காரசேரி, இராமானுஜம்புதூர், அழகப்பபுரம், நெடுங்குளம், முதலூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், அமுதுண்ணாக்குடி, ஆகிய பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கறவை மாட்டுக்கடன் விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது. மேலும் பால் உற்பத்தியாளர்களின் நலனை கருத்தில்கொண்டு அவரவர் சங்கங்களுக்கு சென்று லோன் மேளா நடத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு நடைபெறும் கறவை மாட்டுக்கடன் வழங்கும் விழாவிற்கு செல்லும்போது அவரவர் (பான் கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, 3 போட்டோஅசல்) ஆகியவற்றை எடுத்துச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை அனைத்து பால் உற்பத்தியாளர்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.