இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - சிறுமி பலி
செங்கல்பட்டு மாவட்டம்,மாமண்டூர் ஊத்துக்கோட்டை அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (36). இவரது மகள் ஹர்ஷா(6) மற்றும் பிரகாஷின் அம்மா சசிகலா இருவரையும் பிரகாஷின் உறவினரான கார்த்திக் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு செங்கல்பட்டில் இருந்து மாமண்டூர் பாலாற்று பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தனர்.
அப்போது கார்த்திக் சென்ற வாகனத்திற்கு பின்னால் அதிவேகமாக தாறுமாறாக வந்த டாரஸ் லாரி இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தோடு கார்த்திக், சசிகலா, சிறுமி ஆகியோர் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் சசிகாலா இரண்டு கால்களும் தொடைக்கு கீழ் நசுங்கியது. சிறுமிக்கு வயிற்றுப்பகுதியில் உள்காயம் ஏற்ப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உடனடியாக தகவலறிந்து வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆம்புலன்ஸில் சென்றபோது நன்றாக பேசிக்கொண்டு வந்த சிறுமி ஹர்ஷா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சசிகலா ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். வாகனத்தை ஓட்டிச்சென்ற கார்த்திக் சிறு காயங்களுடன் தப்பித்தார். இதில் ஆம்புலன்ஸில் வந்த போது நன்றாக பேசிக்கொண்டே வந்த சிறுமி மருத்துவமனையில் உயிரிழந்ததால் ஹர்ஷாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்..