மார்த்தாண்டம் மேம்பாலத்தில் அரசு பஸ் மீது மோதிய சொகுசு கார்
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலம் தொடங்கும் பம்மம் என்ற பகுதியில் நேற்று இரவில் ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர் திசையில் சபரிமலைக்கு சென்று விட்டு நாகர்கோவில் நோக்கி சொகுசு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த காரில் ஆந்திராவை சேர்ந்த பக்தர்கள் பயணித்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக சொகுசுகர் திடீரென ஆட்டோவின் பக்கவாட்டில் மோதியது. இதனால் ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது. மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார், அந்த ஆட்டோவின் பின்னால் மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ்சில் நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் காரின் முன் பகுதி அரசு பஸ்ஸில் சிக்கி நொறுங்கியது. இதில் ஐயப்ப பக்தர்கள் 5 பேர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் என 6 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.