மின்சாரம் பாய்ந்து கோவில் ஊழியர் பலி - சஸ்பெண்ட்

மின்சாரம் பாய்ந்து கோவில் ஊழியர் பலி - சஸ்பெண்ட்

கோப்பு படம்

மின்சாரம் பாய்ந்து கோவில் ஊழியர் பலியான நிலையில் மூன்று மின் ஊழியர்கள் 'சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

திருத்தணி அடுத்த கோரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவரும், திருத்தணி முருகன் கோவில் ஓய்வு பெற்ற ஊழியருமான கோவிந்தராஜூ, 65, நேற்று முன்தினம் காலை தன் வயல்வெளிக்கு சென்றபோது, மின்கம்பத்தில் இருந்த மின்கம்பி தொங்கிக் கொண்டிருந்தது.

இந்த மின்கம்பி கோவிந்தராஜூ மேல் பட்டதில், மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். புதிய மின்கம்பங்கள் அமைப்பதற்கு மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியை முறையாக பொருத்தாமல் தரையில் விட்டதால், முன்னாள் கோவில் ஊழியர் உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து, மின் ஊழியர்கள் கவனக்குறைவாக செயல்பட்டதால், திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் கனகராஜ் அறிவுறுத்தலின்படி, உதவி செயற்பொறியாளர் கட்டுமான பிரிவு திருத்தணி - பொறுப்பு கண்ணன், கவனக்குறைவாக செயல்பட்ட திருத்தணி ஊரகம் மேற்கு பிரிவில் பணியாற்றும் ஆக்கமுகவர் ஏழுமலையை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தார்.

மேலும், மின்பாதை ஆய்வாளர் அல்லிமுத்து, கம்பியாளர் அர்ச்சுனன் ஆகியோரையும் தற்காலிக பணயிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். பணியிடைநீக்கம் செய்யப்பட்ட மின் ஊழியர்கள் ஏழுமலை, அல்லிமுத்து, அர்ச்சுனன் ஆகியோருக்கு முறையாக, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.

Tags

Next Story