பரமத்தி-வேலூரில் பாஜக சார்பில் மார்ச் -2ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - கே.பி.ராமலிங்கம் தகவல்
காவிரி- திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அறிவித்து இதுவரை நிறைவேற்றாததால், காவிரி ஆற்றுடன் திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்றக்கோரி வரும், 2ல்- பரமத்தி வேலுாரில், பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி-வேலூர் வட்டம், குப்பிச்சிபாளையம் பகுதியில், மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக் கிழமை பிரதம மந்திரியின் மன் கி பாத் உரையை பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம் மற்றும் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து பரமத்தி-வேலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி ராமலிங்கம், பிரதமர் நரேந்திர மோடி நமது நாட்டில் சாமானிய மக்களாக இருந்து பல்வேறு சேவைகளை செய்து முன்னேறியவர்களை தொடர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியில் அடையாளம் காட்டி வருகிறார். அந்த வகையில் ஆடு வளர்ப்பு, மொழித்துறையில் சேவை செய்பவர்கள் இளம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டியது அவசியம் உள்ளிட்டவை குறித்து இன்றைய மனதின் குரலில் கூறியது அனைவரையும் உத்வேகம் அடைய செய்துள்ளது என்றார். மேலும் கூறிய அவர், காவிரி- திருமணி முத்தாறு இணைப்பு திட்டத்தை தேர்தல் அறிக்கையில் அறிவித்து இதுவரை நிறைவேற்றாததால், விவசாய பெருமக்களின் உயிர்நாடியாக திகழும் காவிரி ஆற்றுடன் திருமணிமுத்தாறு இணைப்பு திட்டத்தை நிறைவேற்ற கோரி வருகின்ற மார்ச் 2-ம் தேதி பரமத்தி-வேலூரில் பாஜக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். மேலும் கூறிய டாக்டர் கே.பி.இராமலிங்கம், தேர்தல் நேரத்தில், கட்சிகள் தேர்தல் அறிக்கைக்காக தயாரிப்பு குழு அமைக்கப்படுகிறது. ஆனால், 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் பொழுது அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுகவினர் 5 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை முறையாக மாநில திமுக அரசு முறையாக பயன்படுத்தவில்லை. அது குறித்து கேள்வி எழுப்பினால் மத்திய அரசு நிதி தரவில்லை என்று கூறுகின்றனர். எனவே மாநில அரசு இதுகுறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். தமிழகத்தில் நிர்வாகத் திறனற்ற ஊழல் மலிந்த பயனற்ற அரசாக திமுக உள்ளது. மக்களை திசை திருப்ப எங்களுக்கு நிதி வழங்கவில்லை என்ன இந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரச்சாரம் செய்வார்கள். ஏற்கனவே தேர்வாகி சென்ற எம்பிக்கள் நிதி குறித்து பாராளுமன்றத்தில் பேசவில்லை. இந்த நாட்டிற்கு மீண்டும் பாஜக தலைமையில் பிரதமர் நரேந்திர மோடி ஆள வேண்டுமா வேண்டாமா என்பது தான் இந்த தேர்தலில் நோக்கமாக உள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவேடு, குடியுரிமைச் சட்டம் போன்ற சட்டங்களை இஸ்லாத்தின் மூத்த தலைவர்களே வரவேற்கின்றனர். திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது காங்கிரஸ், கூட்டணி ஆட்சியாளர்கள்மீது, சிபிஐ விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தது. ஆனால் இப்போது வேண்டும் என்று பாஜக அரசு மீது களங்கம் கற்பிக்கும் வகையில் சிபிஐ அமலாக்கத்துறை போன்றவற்றை பாஜக அரசு பயன்படுத்துவதாக ஒரு சிலர் குற்றம் சாட்டுகின்றனர். கோதாவரி-காவேரி நதிகளை இணைப்பதற்கு தொடர்ந்து மத்திய அரசு முயற்சி எடுத்து வந்த நிலையிலும், தமிழக அரசு அதற்கு ஒத்துழைப்பு இதுவரை அளிக்கவில்லை. கூட்டணி குறித்து பாஜக தலைமைதான் முடிவெடுக்கும். எங்களைப் பொறுத்தவரை தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில், தாமரை சின்னத்தில் போட்டியிடுவோம். பிரதமர் முதல் கட்சி நிர்வாகிகள் வரை அனைவரும் தேர்தல் பிரச்சாரத்தை நாங்கள் தொடங்கி விட்டோம் என்றும் பரமத்தி வேலூரில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே பி ராமலிங்கம் செய்தியாளரிடம் தெரிவித்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் M. இராஜேஷ்குமார், மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் காந்தி, மாநில மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story