மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்!

மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கூட்டம்!

ச.உமா

நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வேட்பாளர்கள், முகவர்கள் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலரும்/ மாவட்ட ஆட்சித்தலைவருமான மருத்துவர் ச.உமா, வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ச.உமா தலைமையில் 2024- பாராளுமன்ற தேர்தல் நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அவர் பேசுகையில், நாமக்கல்(16) பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் சட்டமன்ற தொகுதி வாரியாக 04.06.2024 அன்று காலை 08.00 மணி முதல் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில்நுட்பக் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தபால் வாக்குச்சீட்டுக்கள் பாராளுமன்ற தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் 04.06.2024 அன்று காலை 08.00 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தபால் வாக்குச்சீட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கப்பட்ட 30 நிமிடங்கள் கடந்த பின்பு காலை 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படும்.

மின்னணு முறையில் அனுப்பப்படும் அஞ்சல் வாக்குகள் (ETPBs) 04.06.2024 அன்று காலை 08.00 மணிக்கு முன்பாக பெறப்படும் தபால் வாக்குச்சீட்டுகள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 14 மேசைகள் அமைக்கப்பட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படும்.

வாக்கு எண்ணிக்கையின் போது பழுது ஏற்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தனியாக உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசைக்கு அருகில் பாதுகாக்கப்பட்டு இறுதியில் முதலில் வரும் இரு வேட்பாளர்களுக்கு இடையிலான வாக்கு எண்ணிக்கை வித்தியாசத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணைய அறிவுரைகளின்படி வாக்காளர்கள் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியின் (VVPAT) துண்டுச்சீட்டுக்கள் எண்ணப்படும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற பின்பு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்படும் 5 வாக்குச்சாவடிகளின் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவியின் (VVPAT) துண்டுச்சீட்டுக்கள் எண்ணப்படும். ஒவ்வொரு சுற்றுகளின் முடிவிலும் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்த சுற்றின் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை விவரம் அறிவிக்கப்படும். இதேபோன்று பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் ஒவ்வொரு சுற்றுக்களின் முடிவிலும் வேட்பாளர் பெற்ற வாக்கு எண்ணிக்கை விவரங்கள் தேர்தல் நடத்தும் அலுவலரால் அறிவிக்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அறையில் 1 மேசைக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் 14 முகவர்களும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு 1 முகவர் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 15 முகவர்களை ஒரு வேட்பாளர் நியமனம் செய்யலாம். மேலும் அஞ்சல் வாக்குச்சீட்டு எண்ணும் அறையில் 1 மேசைக்கு ஒரு முகவர் என்ற அடிப்படையில் 7 முகவர்களும் தேர்தல் நடத்தும் அலுவலர் மேசைக்கு 1 முகவர் என்ற அடிப்படையில் 8 முகவர்களை ஒரு வேட்பாளர் நியமனம் செய்யலாம். போட்டியிடும் வேட்பாளர் வாக்கு எண்ணும் இட முகவர்கள் பட்டியலை படிவம்-18 மூலம் வாக்கு எண்ணுவதற்க்கு நிர்ணயிக்கப்பட்ட 04.06.2024 க்கு மூன்று நாட்களுக்கு முன்னதாக 01.06.2024-க்கு முன்பாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.

வேட்பாளர்கள் அளிக்கும் வாக்கு எண்ணுமிட முகவர்களின் பட்டியலின் அடிப்படையில் முகவர்களுக்கு அடையாள அட்டை தயாரித்து வழங்கப்படும்.வாக்குகள் எண்ணப்படுவதற்கு குறைந்தது 1 மணி நேரத்திற்கு முன்னதாக எண்ணுகை இட முகவர்கள், அவர்களின் நியமன கடிதங்கள், ஆளரி அடையாள அட்டை (ஆதார் / வாக்காளர் அடையாள அட்டை) மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலரால் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளையும் கொண்டு வர வேண்டும். வாக்கு எண்ணிக்கை மைய அறையினுள் வேட்பாளரின் முகவர்கள் ஏதேனும் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்டால் இந்திய தேர்தல் ஆணைய அறிவுரைகளின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மேசை முகவர்களை தவிர வேட்பாளர் மற்றும் அவரின் முதன்மை முகவர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசை, தேர்தல் நடத்தும் அலுவலரின் மேசைக்கு அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணிக்கை இட முகவர்கள் அலைபேசி / ஐபேட் / மடிக்கணினி / கால்குலேட்டர் போன்ற யாதொரு மின்னனு கருவியும் கொண்டு செல்ல அனுமதியில்லை. வாக்கு எண்ணிக்கை இட முகவர்கள் பந்து முனை பேனா / பென்சில் / குறிப்பு அட்டை / வாக்குச்சாவடி அலுவலரால் வழங்கப்பட்ட 17C படிவ நகல் ஆகியவற்றை வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதி வழங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை இட முகவர்கள் வாக்கு எண்ணுமிடத்தில் இருந்து வாக்கு எண்ணிக்கையிடையே வெளியேறினால் திரும்ப உள்ளே வர இயலாது. எதிர்வரும் 04.06.2024 அன்று நடைபெறவுள்ள நாமக்கல் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற மாவட்ட நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென மாவட்ட தேர்தல் அலுவலரும் ,மாவட்ட ஆட்சித்தலைவருமான மருத்துவர் ச.உமா கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மருத்துவர் ரெ.சுமன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆர்.பார்தீபன் (நாமக்கல்), சே.சுகந்தி (திருச்செங்கோடு), ச.பிரபாகரன் (சேந்தமங்கலம்), த.முத்துராமலிங்கம் (இராசிபுரம்), ச.பாலகிருஷ்ணன் (பரமத்தி), லோகநாயகி (சங்ககிரி), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ந.சிவக்குமார், வட்டாட்சியர் (தேர்தல்)திருமுருகன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story