திருத்தணியில் திறப்புக்கு காத்திருக்கும் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம்
புதிய அலுவலகம்
திருத்தணி பழைய சென்னை சாலையில், கடந்த, 2015 ம் ஆண்டு முதல் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி நேர அலுவலகம் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகம் முதல்மாடியிலும், குறுகிய இடத்திலும் இயங்கி வருவதால் அலுவலக ஊழியர்கள் மற்றும் வாகன பதிவு மற்றும் ஓட்டுனர் உரிமம் பெறுபவர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகம் சென்னை--- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, குன்னத்துார் பேருந்து நிறுத்தம் அருகே 1.15 ஏக்கர் அரசு நிலத்தில், 2.42 கோடி ரூபாய் மதிப்பில் கடந்தாண்டு ஜன., 27ம் தேதி அடிக்கல் நட்டு கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன.
கடந்த ஒரு மாதத்திற்கு முன் கட்டுமான பணிகள் முழுமையாக முடிந்துள்ளன. இந்த அலுவலகம் திறப்பதற்கு அமைச்சர் வருகை குறித்த தேதிக்காக காத்திருக்கிறது. புதிய கட்டடத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில், நேர்முக உதவியாளர் அறை, கணினி அறை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
மாவட்ட நிர்வாகம் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலக கட்டடம் திறந்து வாகன ஓட்டிகளின் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.