மழைக்காக ஒதுங்கி நின்றவர் மின்னல் தாக்கி பலி
கோவில்பட்டி அருகே மழைக்காக மரத்தின் கீழ் ஒதுங்கி நின்றவர் மின்னல் தாக்கி பரிதாபமாக பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில் இன்று மாலை பலத்த காற்று இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்போது நெல்லையில் இருந்து விருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊரணி பட்டியைச் சேர்ந்த ராஜ மாணிக்கம்(55) என்பவர் நாலாட்டின்புதூர் பகுதியில் மழைக்காக சாலைப் பகுதியில் உள்ள மரத்தின் கீழ் ஓரமாக நின்று உள்ளார். அப்போது திடீரென இடி மின்னல் தாக்கியதில் ராஜமாணிக்கம் சம்பவ இடத்திலேயே பரிதாமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து நாலாட்டின்புதூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொ) கிங்ஸ்லி தேவ் ஆனந்த் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story