தைவான் நாட்டில் இறந்தவர் உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு

தைவான் நாட்டில் இறந்தவர் உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு
இறந்து போன சாம்பமூர்த்தி 
தைவான் நாட்டில் இறந்தவர் உடலை மீட்டுத் தரக்கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே, ஒக்கநாடு கீழையூர் கீழத்தெருவை சேர்ந்தவர் ராமசாமி. இவரது மகன் சாம்பமூர்த்தி (வயது 57), இவரது மனைவி கண்மணி இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் உள்ளார். கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் சாம்பமூர்த்தி தைவான் நாட்டில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் திடீரென செவ்வாய்க்கிழமை அதிகாலை சாம்பமூர்த்தி, அங்கு இறந்துவிட்டதாக, அந்த நாட்டில் உள்ள தமிழ் சங்கம் மூலமாக அவரது மனைவி கண்மணிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த தகவலின் அடிப்படையில், கண்மணி தன் மகள் மற்றும் உறவினர்களுடன் தஞ்சை மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து தனது கணவரின் உடலை விரைவில் பெற்றுத் தருமாறு கோரிக்கை மனு அளித்தார். இந்த மனுவை, அவசர கால நடவடிக்கையாக ஏற்ற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவனை இழந்த கண்மணி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், கிராம மக்கள் மிகுந்த சோகத்தில் உள்ளதுடன், இறந்த சாம்பமூர்த்தி முகத்தை கடைசி முறையாக பார்க்கவும், இறுதி நிகழ்ச்சிகள் செய்வதற்காகவும் சாம்பமூர்த்தியின் உடலை எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.

Tags

Next Story