தரமில்லை எனக்கூறி தார் சாலையை பெயர்த்தெடுத்தவர் மீது போலீசில் புகார்
அதிகாரிகள் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவல்நாயக்கன்பட்டியில் முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் ஒரு கிலோ மீட்டர் அளவிலான தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார் சாலை 25 மி.மீ அளவில் போடப்பட வேண்டும். ஆனால் இந்த தார்ச்சாலை 10 மி.மீ க்கும் குறைவாக இருப்பதாக காக்கங்கரை பகுதியை சார்ந்த சுரேஷ் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து ஊடகங்களில் செய்தி வெளியாகியதின் காரணமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் உத்தரவின் பெயரில் திட்ட இயக்குனர் செல்வராசு மற்றும் அரசு அதிகாரிகள் தரம் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதிகாரிகள் தெரிவிக்கையில் 20மி.மீ மேலாகவே தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது எனவும், தார்ச்சாலை தரமாக உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். அரசு போடப்பட்ட தார் சாலையை அத்துமீறி காக்கங்கரை பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தரமாக இல்லை எனக் கூறி கையில் பெயர்த்தெடுத்து உள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் நேரு கந்திலி காவல் நிலையத்தில் அரசால் போடப்பட்ட 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தார்சாலையை சேதப்படுத்தியதற்கும், பணி செய்யவிடாமல் தடுத்ததற்காகவும் சுரேஷ் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.