கடத்தல் வாகனங்களை பிடித்ததால் இடமாற்றம் ; தற்கொலைக்கு முயன்ற காவலர்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்தவர் கணேஷ்குமார். இவர் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் குற்றவாளிகளை பிடிப்பது, சட்டவிரோதமாக கேரளாவுக்கு மண்ணெண்ணெய், அரிசி கடத்தும் வாகனங்களை கண்டறிந்து மடக்கி பிடிப்பது இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள வேலை.
இதனால் ரோந்து பணியில் சீருடை இல்லாமல் சுற்றி கேரளாவுக்கு மண்ணெண்ணெய் கடத்தி செல்லும் ஏராளமான வாகனங்களை மடக்கி பிடித்து கொல்லங்கோடு போலீசில் ஒப்படைத்துள்ளார். இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி நள்ளிரவில் நீரோடி சோதனை சாவடி வழியாக மண்ணெண்ணெய் ஏற்றி சென்ற ஒரு பயணிகள் வேனை பிடித்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் கொண்டு சென்றார். அப்போது அந்த வாகனத்தை விடுவிக்க கோரி கடத்தலுக்கு ஆதரவான சிலர் போலீஸ் நிலையத்தில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கணேஷ் குமார் அவர்களிடம் காவல் நிலையத்திலிருந்து வெளியேறுமாறு கூறியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த கடத்தல்காரர்கள் பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பில் உள்ள ஒரு மீனவ பிரதிநிதி கலெக்டர் அலுவலகத்தில் பொய் புகார் அளித்தனர்.
இதனால் நேற்று முன்தினம் மாலை ஏட்டு கணேஷ்குமார் ஆயுதப்படைக்கு செல்லுமாறு மாவட்ட காவல் அலுவலகத்தில் இருந்து கொல்லங்கோடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கணேஷ் குமார் நேற்று மாலை திடீரென வீட்டில் வைத்து விஷம் அருந்தினர். தகவல் அறிந்த உறவினர்கள் சிகிச்சைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கேரள மாநிலம் நெய்யாற்றின் கரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். கடத்தல் வாகனங்களை பிடித்த ஏட்டு ஒருவர் விசம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.