கணவரின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கிய கர்ப்பிணி மனைவி
அரசு மரியாதை
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலமரத்துபட்டி பசும்பொன் நகரை சேர்ந்தவர் தங்கப்பாண்டி(25). இவர் கடந்த ஓராண்டுக்கு முன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியை சேர்ந்த அம்ச ரேணுகா(22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தங்கப்பாண்டி தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள பேக்கரியில் ஸ்வீட் மாஸ்டராக பணிபுரிந்து வந்தார். அம்ச ரேணுகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். தங்கப்பாண்டி கடந்த 29ம் தேதி இரவு வேலை முடிந்து சுரண்டையில் இருந்து சிவகாசிக்கு பைக்கில் வந்தார்.
குகன்பாறை - துலக்கன்குறிச்சி இடையே வந்த போது பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சறுக்கி விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த தங்கபாண்டியை அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 31ம் தேதி சிகிச்சை பலனின்றி தங்கபாண்டி மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து தங்கபாண்டியின் உடல் உறுப்புகளை தானம் அளிக்க அவரது மனைவி முன் வந்தார். அவரது உடலில் இருந்து இதயம், நுரையீரல், கல்லீரல், இரு சிறுநீரகங்கள், இரு கண்கள் தானமாக வழங்கப்பட்டது. இதன் மூலம் 7 பேருக்கு மறுவாழ்வு கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நேற்று திருத்தங்கல் ஆலமரத்துபட்டியில் அரசு மரியாதை உடன் தங்கபாண்டி உடலுக்கு இறுதி சடங்கு நடைபெற்றது. ஆர்.டி.ஓ விஸ்வநாதன் தலைமையில் டி.எஸ்.பி சுப்பையா, வட்டாட்சியர் வடிவேல், இன்ஸ்பெக்டர் வேதவல்லி ஆகியோர் தங்கபாண்டி உடலுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் அவரது நண்பர்கள் சார்பாக இறந்தும் வாழும் வள்ளலே, உடல் உறுப்புகளை தானமாக கொடுத்து பல உயிர்களை காப்பாற்றும் எங்களின் பாசமே என்றும் மரணமே இல்லையே உனக்கு வாசகம் அடங்கிய பேனர் பார்ப்பவர்கள் மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.