அரசுபள்ளி மாணவர்களுக்கு தீபாவளிபரிசு வழங்கிய தனியார் நிறுவனம்
கரூர் அருகே அரசு பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ரூபாய் 2 லட்சம் மதிப்பில் தீபாவளி பரிசு பொருட்களை வழங்கி வாழ்த்திய தனியார் நிறுவனம். கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியம் தொட்டியப்பட்டியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இந்தப் பள்ளியில் 94 மாணாக்கர்கள் பயின்று வருகின்றனர். தனியார் பள்ளிக்கு நிகராக அந்தப் பள்ளியை, பள்ளியின் தலைமை ஆசிரியர் மூர்த்தி வழி நடத்தி வருகிறார்.
இன்று கோவை எல்ஜி பாலகிருஷ்ணன் & பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு ரூபாய் ஒரு லட்சம் மதிப்பீட்டில் சீருடைகளும், ரூ.20,000- மதிப்பில் ஷூ, சாக்ஸ், பெல்ட், ஐடி கார்டு உள்ளிட்டவற்றை வழங்கினர். மேலும், மாணவர்கள் எளிதாக கல்வி கற்க இரண்டு எல்சிடி ஸ்மார்ட் போர்டு வாங்க வங்கி வரைவோலையாக ரூபாய் 89 ஆயிரம் வழங்கி உள்ளனர். ஆகமொத்தம் 2 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை தீபாவளி பரிசாக வழங்கினர்.
இந்த நிறுவனம் கடந்த 2019 ஆம் ஆண்டு ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடமும் கட்டிக் கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாணாக்கர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கும் விழா, பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஊர் முக்கியஸ்தர்கள் சுதா இளங்கோ, முருகேசன், கதிர்வேல், மாணாக்கர்களின் பெற்றோர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.