சங்ககிரியில் பள்ளி கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்ட வேண்டுகோள்
பள்ளி வளாகம்
சேலம் மாவட்டம் சங்ககிரி, சார்பதிவாளர் அலுவலகம் அருகே ஊராட்சி ஒன்றிய வார்டு எண்.1, எண்.2 ஆகிய இரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் ஒரே வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது . இதேபோல் மேற்கு பகுதியில் வார்டு எண் 2 பள்ளியும், கிழக்கு பகுதியில் வார்டு எண் 1 பள்ளியும் செயல்பட்டு வருகின்றது.
இதில் 1வது வார்டு பள்ளியில் 120 பேரும், 2வது வார்டுபள்ளியில் 150 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர். இரு பள்ளிகளிலும் தனி தனியாக மாணவ, மாணவிகளுக்கென சத்துணவு செய்யும் சமையல் அறைகள் உள்ளது. தமிழரசின் சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத்துறையின் சார்பில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காய்கறி பிரியாணி, கொண்டைக்கடலை புலாவு, தக்காளி சாதம், சாதம், சாம்பார், கறிவேப்பிலை, கீரை சாதம் என தினசரி ஏதாவது ஒரு வகை சாதமும், மிளகு, தக்காளி மசாலா, வேக வைத்த மூட்டை என தினசரி ஒரு முட்டை சேர்த்து மாணவ, மாணவிகளுக்கு காலை, மதிய உணவு வழங்கப்பட்டு வருகின்றது.
இதனையடுத்து 1வது வார்டு பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு காலை, மதிய உணவு சமைத்த பின்னர் முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகள், குப்பைகள், பள்ளி வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் கொட்டாமல் சமையல் அறைக்கு ஓட்டியுள்ள பள்ளியின் சேதமடைந்த சுற்றுச்சுவரின் ஓரம் கொட்டப்பட்டு வருகின்றது.
இந்த சுற்று சுவர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மாவட்ட கல்வி அலுவலகத்திற்கு மிக அருகில் உள்ளது . மேலும் சேதம் அடைந்த சுற்றுச்சுவரை ஓட்டி சங்ககிரியிலிருந்து எடப்பாடி செல்வதற்கும், சேலம்}கோவை தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையாக உள்ளதையடுத்து ஏராளமான போக்குவரத்துகள், பள்ளி, மாணவ, மாணவிகள், அரசு உயரதிகாரிகள் அப்பகுதி வழியாக தினசரி அதிகளவில் கடந்து செல்வதால் சங்ககிரி பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் சுற்றுச்சுவரின் பல்வேறு பகுதிகளில் சிதறி கிடக்கும் முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகளை பேரூராட்சியின் லாரியின் மீது ஏறியும், கைகளை கொண்டும் சிரமப்பட்டு அகற்றி வருகின்றனர்.
பள்ளியில் சுகாதாரங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடங்கள் கற்பித்து வருவது குறிப்பிடத்தக்கது. எனவே சங்ககிரி பேரூராட்சிக்குட்பட்ட 1வதுவார்டு தொடக்கப்பள்ளியிலிருந்து கொட்டப்படும் முட்டை ஓடுகள், காய்கறி கழிவுகளை சிதலமைடந்துள்ள சேதமடைந்த சுற்றுச்சுவர் பகுதியில் கொட்டாமல் பள்ளி வளாகத்தில் உள்ள குப்பை தொட்டியில் சேகரித்து பேரூராட்சி சார்பில் ஒவ்வாரு வார்டுக்கும் தனி தனியாக வரும் குப்பை தள்ளு வண்டியில் கொட்டுவதற்கும்,
பேரூராட்சி தூய்மை பணியாளர்களின் சிரமங்களை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.