சேலம் மேற்கு தொகுதியில் குடிநீர் குழாய் அமைத்து கொடுக்க வேண்டுகோள்

சேலம் மேற்கு தொகுதியில்  குடிநீர் குழாய் அமைத்து கொடுக்க வேண்டுகோள்

எம்எல்ஏ அருள்

சேலம் மேற்கு தொகுதியில் புதிய குடிநீர் குழாய் அமைத்து கொடுக்க வேண்டும் என அருள் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.

சேலம் மேற்கு சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ. அருள், தமிழக அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:- சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள குடிநீர் தொட்டிக்கு மேட்டூரிலிருந்து குடிநீர் வருகின்ற பிரதான குழாய் 5 ரோட்டில் இருந்து சாரதா கல்லூரி சாலை வழியாக வருகிறது.

இந்த குடிநீர் குழாய்கள் பதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் 5 ரோடு, சொர்ணபுரி, அழகாபுரம் பகுதிகளில் அடிக்கடி குழாய் உடைந்து பாதிப்பு ஏற்படுகிறது. ஒருமுறை உடைப்பு ஏற்பட்டால் அதனை சரிசெய்ய ஒரு வார காலம் ஆவதால் சேலம் மாநகரத்தில் ஒரு வார காலத்திற்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. எடுத்துக்காட்டாக நான் வசிக்கும் பகுதியான 5-வது வார்டு, அருண் நகர், ராஜராஜன் நகர் பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வருகிறது.

எனவே சேலம் மாநகரில் வசிக்கும் மக்களின் நலன் கருதி பழைய குழாய்களை அகற்றி விட்டு புதிய பிரதான குடிநீர் குழாய்கள் அமைத்து கொடுக்க வேண்டும். அதேபோல் எனது தொகுதியில் உள்ள புறநகர் கிராமப்புற பகுதிகளான ஓமலூர் ஒன்றியம், சேலம் ஒன்றியம், தாரமங்கலம் ஒன்றியத்திற்கு வரும் குடிநீர் குழாய்கள் புதிதாக ஓமலூரில் இருந்து தாரமங்கலம், கொங்கணாபுரம் வழியாக பரமத்திவேலூர் வரையில் சாலை மேம்பாட்டுப்பணி நடைபெறுவதால் ஓமலூர் -தாரமங்கலம் சாலையில் சாலைப்பணி செய்யும் ஒப்பந்ததாரர் உடைத்து விடுவதால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது.

அந்த பகுதிகளில் 15 நாட்களுக்கு ஒருமுறை கூட குடிநீர் வழங்க முடியவில்லை. தற்போது கோடைகாலமாக உள்ளதால் பொதுமக்களின் நலன் கருதி குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்கும் குடிநீர் குழாய் உடைவதை தடுத்து நிறுத்திடவும் உரிய நடவடிக்கை எடுத்து மக்களை காக்க கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story