பேராவூரணியில் தென்னை தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை

பேராவூரணியில் தென்னை தொழிற்பேட்டை அமைக்க கோரிக்கை

கோரிக்கை மனு அளித்த விவசாயிகள்

பேராவூரணி பகுதியில் தென்னையில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்பேட்டை அமைத்து தர நடவடிக்கை எடுக்கவேண்டும் என தஞ்சை எம்பி முரசொலியிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பகுதியைச் சேர்ந்த ஈஸ்ட் கோஸ்ட் தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில், அதன் தலைவர் கவுரவத் தலைவர் உ.வேலுச்சாமி, அறந்தாங்கி பி.செல்லத்துரை, பள்ளத்தூர் ஏ.குழந்தைராஜ், டி.செந்தில்குமார், கரம்பக்காடு பி.முத்துராமலிங்கம், பி.கோவிந்தசாமி ஆகியோர் திங்கட்கிழமை மாலை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலியை நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள வலியுறுத்தி, கோரிக்கை மனு அளித்தனர்.

அதில் கூறியிருப்பதாவது, "தங்களின் மாபெரும் வெற்றிக்கு எங்களுடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள். தஞ்சாவூர் மாவட்டம் நெல் மற்றும் தென்னை விவசாயத்தை நம்பியுள்ள மாவட்டம் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள். பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகள் முழுவதுமாகவும், ஒரத்தநாட்டில் ஒரு பகுதியும் தென்னையை மட்டுமே நம்பி உள்ளனர். இவர்களின் வாழ்வாதாரம் முழுவதுமாகவே தென்னையைச் சார்ந்து உள்ளது. இதனை அரசின் கவனத்திற்கு பல தடவை நாங்கள் எடுத்து சென்றுள்ளோம். அரசு சில திட்டங்களை தென்னை விவசாயிகளுக்காக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கிறது.

ஆனாலும் அதனை அமல்படுத்தும் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தினால், விவசாயிகளுக்கு சரியான பயன் கிடைப்பதில்லை. தேங்காய் விலை வீழ்ச்சியினாலும் நாளுக்கு நாள் விவசாயிகள் நலிவடைந்து வருகின்றனர். அதிகம் தேங்காய் உற்பத்தியாகும் பேராவூரணிக்கென தேங்காய் கொப்பரை கொள்முதல் நிலையம் இல்லாதது மிகவும் வருத்தமான விஷயம். இவற்றை தாங்கள் கருத்தில் கொண்டு எங்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற கீழ்காணும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம். பொது விநியோகத் திட்டத்தில் (PDS) பிரிவில் தேங்காய் எண்ணெய் கொடுப்பதற்கு அரசு ஆலோசித்து வருவதாக செய்தி வந்துள்ளது. இது எங்களுடைய நீண்ட கால கோரிக்கையாகும். அது நிறைவேறினால் ஓரளவு தேங்காய்க்கு விலை கிடைக்கும் தாங்களும் இதற்கு உதவ வேண்டுகிறோம். கடைமடைப் பகுதியான பேராவூரணி பகுதியில் ஆற்றுப் பாசனம் பொய்த்து விட்டதால் அனைவரும் தென்னை விவசாயத்திற்கு மாறி உள்ளனர். ஆனால் தென்னை விவசாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.

அதற்கு எங்கள் பகுதியில் தென்னையின் மதிப்பு கூட்டப்பட்ட (Value Added ) பொருள்களுக்கான ஒரு மாபெரும் தொழில் பேட்டை உருவாக்கி தர வேண்டும். அதுவும் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்தால் தூத்துக்குடி துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யவும் ஏதுவாக இருக்கும். பேராவூரணிக்கென ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கான இடம் மற்றும் கட்டிடம் இல்லாமல் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் கொப்பரைக் கொள்முதல் நிலையமும் இங்கு அமையப் பெறவில்லை. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தாங்கள் தலையிட்டு அதனை துரிதப்படுத்த வேண்டுகிறோம். தாங்கள் எங்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகிறோம்" இவ்வாறு கூறப்பட்டிருந்தது. மனுவைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தொகுதி சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலந்து பேசி, அமைச்சர்கள், முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

Tags

Next Story