விபத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் பலி

விபத்தில் ஓய்வு பெற்ற உதவி ஆய்வாளர் பலி

 திண்டிவனத்தில் பைக் -அரசு பஸ் விபத்தில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

திண்டிவனத்தில் பைக் -அரசு பஸ் விபத்தில் ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழந்தார்.

சென்னையில் இருந்து சிதம்பரத்திற்கு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை கரூர் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி சென்றார். இதேபோல் திண்டிவனம் அடுத்த கோபாலபுரம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன்(65), அவரது மனைவி லட்சுமி(60), ஆகியோர் இருசக்கர வாகனத்தில் பாதிரி கிராமத்தில் இருந்து திண்டிவனம் சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து தீர்த்தகுளம் செல்லும் சாலையில் ராமச்சந்திரன் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது சென்னையிலிருந்து சிதம்பரம் நோக்கி வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது அதி வேகமாக மோதியது. இதில் கணவன் மனைவி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டையம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிச்சை பலனின்றி ஓய்வு பெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தின் டீசல் டேங்க் உடைந்ததால், பேருந்தை அப்புறப்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் காவல் நிலைய போலீசார் விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story