சாதிய வன்கொடுமை வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம்
மாவட்ட நீதிமன்றம்
சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட முதன்மை நீதிமன்றம், போக்சோ, வணிகவியல், குடும்ப நல நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம் உள்பட 35 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் இல்லை. இது மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத்தில் 110வது விதியின் கீழ், சேலத்தில் தீண்டாமை வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதன்படி நீதிமன்றத்தில் புதியதாக எஸ்சி, எஸ்டி வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நாளை (17ம்தேதி) 10.35 மணிக்கு நடக்கிறது. அதனுடன் வழக்கறிஞர்களுக்கான 32 லாசேம்பரும், ஆத்தூரில் கூடுதல் மாவட்ட நீதிமன்றமும் திறக்கப்படுகிறது. சென்னை ஐகோர்ட் நீதிபதி சுப்பிரமணியம் திறந்து வைக்கிறார். ஐகோர்ட் நீதிபதிகள் இளந்திரையன், மஞ்சுளா, சட்ட அமைச்சர் ரகுபதி ஆகியோரும் கலந்து கொண்டு பேசுகின்றனர். சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்கிறார். சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, சேலம் எஸ்.பி. அருண்கபிலன் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம் வக்கில் சங்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.