அடுத்தடுத்து இறந்த பசுமாடுகள் - வேதனையில் விவசாயி
ராணிப்பேட்டை அருகே தண்ணீர் குடித்த 4 பசுமாடுகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த விலாரி கிராமத்தில் ஏழுமலை என்ற விவசாயிக்கு சொந்தமான 4 பசுமாடுகளுக்கு காலையில் தண்ணீர் காட்டிய நிலையில், அடுத்தடுத்து நிலைகுலைந்து கீழே விழுந்து ஒரே நேரத்தில் உயிர்விழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திமிரி அடுத்த விலாரி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஏழுமலை(50). இவர் தனக்கு சொந்தமான 6 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் சாகுபடி செய்து வருவதோடு, கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகிறார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக பக்கத்து நிலத்தில் மாடுகள் மேய்ந்ததால் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது. இந்த நிலையில் நேற்று காலை பசு மாடுகளுக்கு வழக்கம் போல தண்ணீர் காட்டிய சிறிது நேரத்தில் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து நான்கு மாடுகளும் நிலைகுலைந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஏழுமலை, திமிரி போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் மாடுகள் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து 4 மாடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
Next Story