26 ஆம் தேதி நள்ளிரவு தீவிர புயலாக மேற்குவங்காள கடற்கரையை கடக்கும்
புயல்
நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை 05:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இது வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச-கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு-தென்மேற்கேயும் மற்றும் மேற்குவங்காள- கேன்னிங்-லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து , புயலாக வலுப்பெற்று, வரும் 25 ஆம் தேதி காலை மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து,
தீவிர புயலாக வரும் 25 ஆம் தேதி இரவு வலுப்பெற்று, வரும் 26 ஆம் தேதி நள்ளிரவு தீவிர புயலாக வங்க தேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்குவங்காள கடற்கரையை கடக்க கூடும். மேலும், தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
வரும் 25 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 5 தினங்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3° செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்றும், நாளையும் குமரிக்கடல் பகுதிகள்,
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும், ஆழ் கடலுக்கு சென்ற மீனவர்கள் விரைவில் கரைக்கு திரும்பவும் அறிவுத்தி உள்ளது தென் மண்டல வானிலை ஆய்வு மையம்.