ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை!
கோவையில் ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் ஒற்றை யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை: மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.இந்த யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேடி மலை அடிவாரப் பகுதிகளாக மாங்கரை,வீரபாண்டி,தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்தி வருவது தொடர்ந்து வருகிறது.இந்த நிலையில் இன்று அதிகாலை துடியலூர் அருகே உள்ள பாப்பநாயக்கன்பாளையம் கிராமத்திற்குள் புகுந்த ஒற்றை ஆண் யானை குணசேகரன் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்தது.காட்டு யானையை கண்ட அப்பகுதியில் இருந்த நாய்கள் குரைக்கத் தொடங்கிய நிலையில் உணவு தேடி வந்த யானை வீட்டின் முன் இருந்த அரிசி மூட்டையை தூக்கி வீசி அதைத் தின்று சேதப்படுத்தியுள்ளது.பின்னர் அங்கிருந்து வெளியேறிய யானை முத்துக்குமார் என்பவரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த மக்காசோளத்தை சாப்பிட்டு சென்றது.இந்த காட்சிகள் அங்கு பொருத்தபட்டிருந்த சிசிடிவியில் பதிவாகிய நிலையில் தற்போது அந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில் கோடை காலத்தில் வனப்பகுதியில் முற்றிலும் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி நாள்தோறும் யானைகள் கிராமத்திற்குள் வந்த வண்ணம் உள்ளது எனவும் மழை பொழிவு குறைவான காரணமாக மிகக் குறைந்த அளவிலேயே விவசாயம் நடைபெற்று வரும் நிலையில் அதனையும் யானைகள் சேதப்படுத்துவதாக தெரிவித்தனர். வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை கண்காணித்து வனத்திற்குள் திருப்பி அனுப்ப முயற்சி எடுக்க வேண்டும் என்றவர்கள் யானைகளால் உயிர்சேதம் ஏற்படும் முன் காட்டு யானைகள் குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியிறுத்தினர்.