குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம்
குடற்புழு நீக்க மாத்திரை
சேலம் கோட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் நடந்தது. வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மேயர் ராமச்சந்திரன், ஆணையாளர் பாலச்சந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் டாக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் 6 மாதங்களுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. முகாமில் 1 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்கள் ஆகியோருக்கு இலவசமாக குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் அரசு, தனியார் பள்ளி, கல்லூரிகளில் இந்த முகாம் நடைபெறுகிறது. மாவட்டத்தில் ஒன்று முதல் 19 வயதுடைய 11 லட்சத்து 11 ஆயிரத்து 84 பேருக்கும், 20 முதல் 30 வயதுடைய 2 லட்சத்து 24 ஆயிரத்து 827 பெண்களும் பயன்பெற உள்ளனர். இந்த முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு மாத்திரை வழங்குவதற்கான சிறப்பு முகாம் வருகிற 16-ந் தேதி நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.