மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கல்
குழந்தைகளுக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன
தஞ்சாவூரில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்குகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள, அரசர் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் அனைத்து துறைகள் ஒருங்கிணைந்து நடத்திய, மாற்றுத் திறனாளிகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இம்முகாமில் மருத்துவத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த் துறை, வேலைவாய்ப்புத் துறை, மத்திய கூட்டுறவு வங்கி, மாவட்ட தொழில் மையம், ஆவின், ஊரக வாழ்வாதார இயக்கம், முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டம், தாட்கோ, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, முன்னோடி வங்கி மற்றும் பள்ளி கல்வித்துறை ஆகிய துறைகள் பங்கேற்றது. இம்முகாமில் 150க்கும் மேற்பட்ட, மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு யுடிஐடி அட்டை, உதவி உபகரணங்கள், வங்கி கடன், இதர துறை சார்ந்த நலத்திட்ட உதவிகள், தமிழ்நாடு உரிமைகள் திட்டம் தொடர்பான மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பில் பதிவு செய்யாதவர்கள் கலந்து கொண்டு பதிவு செய்து பயன் பெற்றனர். மருத்துவ முகாமில், மூளை முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சிறப்பு குழந்தைக்கு, சிறப்பு சக்கர நாற்காலியும், 65 நபர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையும் வழங்கப்பட்டது. இம்முகாமில், திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆர்.உஷா புண்ணியமூர்த்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எஸ்.சங்கர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் வ.சீனிவாசன் மற்றும் அனைத்து அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Next Story