ஆரணி அருகே சிறப்பு கிராம சபை கூட்டம் பாதியில் நிறுத்தம்
கிராம சபை கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கல்பூண்டி கிராமத்தில் சுமார் 1200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊராட்சி மன்ற தலைவராக சரஸ்வதி விஜயன் என்பவரும் துணை தலைவராக ஜோதிலட்சுமி பாபு உள்ளிட்ட 6 வார்டு உறுப்பினர்களும் ஊராட்சி செயலராக சேட்டு என்பவரும் பணியாற்றி வருகின்றார். மேலும் நேற்று கல்பூண்டி கிராமத்தில் சிறப்பு கிராம சபை கூட்டம் ஸ்ரீவாழியம்மன் ஆலய வளாகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி இல்லாமல் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக ஆரணி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி பங்கேற்றார். ஊராட்சி மன்ற துணை தலைவர் மற்றும் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் யாரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
இதனை தொடர்ந்து கூட்டம் நடைபெற்ற போது 3வது வார்டு உறுப்பினர் உதயகுமார் என்பவர் திடீரென கூட்டத்தில் நுழைந்து அதிகாரி மகாலட்சுமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு எனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை. ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் எங்கே என அடுத்தடுத்து கேள்வி எழுப்பினார். பின்னர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலட்சுமி வார்டு உறுப்பினர் உதயகுமாரை சமரசம் செய்ய முயன்றனர். சமசரத்தை ஏற்க மறுத்த உதயகுமார் உரிய பதிலளிக்க வேண்டும் கிராம பொதுமக்களுக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்றும், பெயரளவிற்கு 100 நாள் பணியில் உள்ள பெண்களை அமர வைத்து ரகசியமாக கூட்டத்தை நடத்துவது ஏன் என்று மீண்டும் அதிகாரியிடம் வார்டு உறுப்பினர் உதயகுமார் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கூட்டதை பாதியில் நிறுத்துவதாக அதிகாரி மகாலட்சுமி தெரிவித்ததன் பேரில் ,துறை சார்ந்த அதிகாரி தன்னுடைய பேனரை எடுத்து கொண்டு சென்றதால் 100நாள் பணி பெண்களும் கலைந்து சென்றனர்.சிறப்பு கிராம சபை கூட்டம் தலைவர் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் கூட்டத்தை நடத்தியதால் வார்டு உறுப்பினர் கேள்வி எழுப்பிய நிலையில் கூட்டத்தை அதிகாரிகள் பாதியில் ரத்து செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.