1 லட்சம் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய ஆன்மீக அறக்கட்டளை
கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம்
தென்னகத்துக்கு கயிலாயம் என போற்றப்படும் திருவண்ணாமலையில் அருள்தரும் அண்ணாமலையார் திருக்கோயில் பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைக்க முக்திதரும் திருத்தலமாக இருக்கிறது. இங்கு இறைவன் மலை (கிரி) வடிவில் எழுந்தருளி காட்சியளிப்பதால் இங்குள்ள அண்ணாமலையே சிவனாக பக்தர்களுக்கு அருள்தருகிறார். அதனால் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். அதனால் மாதந்தோறும் பவுர்ணமிஅன்றுதிருவண்ணாமலைநகரமே விழாக்கோலாாக காட்சி அளிக்கிறது. இந்நிலையில் திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 4.02 மணிக்கு தொடங்கி நேற்று அதிகாலை 2.48 மணிக்கு நிறைவடைந்தது. அதையொட்டி அண்ணாமலையார் திருக்கோயிலில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு சுவாமிக்கும் அம்மனுக்கும் சிறப்பு வழிபாடு நடந்தது.
பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவல பாதை குபேர லிங்கம் அருகே முழு நிலவு அன்னதான ஆன்மீக அறக்கட்டளை சார்பில் சுமார் ஒரு லட்சம் கிரிவல பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு தலைமையேற்று அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் பி.ரவிசந்திரன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி விழாவை தொடங்கிவைத்தார்.
இந்த அறக்கட்டளை சார்பில் கடந்த 13 ஆண்டுகளாக பவுர்ணமி தோறும் கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் ஆன்மீக தொண்டினை செய்து வருகின்றனர். மேலும் கிரிவல பாதையில் தூய்மை பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். ஐப்பசி மாத பவுர்ணமியையொட்டி அறக்கட்டளை சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கியதோடு பாதுகாக்கப்பட்ட குடிநீரும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் பெங்களூர் டி.சங்கர், முருகன், ஆனந்த், ராஜேஸ்வரி, தங்கராசு, விஜி, வீரமணி, துரைராஜ், நேருஅய்யா, மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.