திருச்செங்கோடு அருகே மயானத்தில் திடீர் தீ பொதுமக்கள் சாலை மறியல்

திருச்செங்கோடு அருகே மயானத்தில் திடீர் தீ பொதுமக்கள் சாலை மறியல்

மறியலில் ஈடுபட்ட மக்கள்

திருச்செங்கோடு அருகே மயானத்தில் திடீர் தீ பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

. நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரின் மையப் பகுதியான ஆறாவது வார்டில் செங்கோடம் பாளையம் பழைய சுடுகாடு அமைந்துள்ளது. இந்த பழைய சுடுகாட்டிற்கு கொண்டு வரப்படும் இறந்தவர்களின் உடைமைகளான மெத்தை, தலையணை போன்றவை சுடுகாட்டில் ஒரு பகுதியில் போடப்படுகிறது.

மேலும் குப்பைகளும் அப்பகுதியில் கொட்டப்படுகிறது. சமூகவிரோதிகள் சிலரால் குப்பைகள் தீ வைக்கப்படுவதால், அடிக்கடி தீப்பரவி புகைமூட்டம் ஏற்படுகிறது. இந்நிலையில் இரவு திடீரென குப்பைகளில் தீப்பிடித்த நிலையில், தீயை அணைப்பதற்காக தீயணைப்பு துறைக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.

ஆனால், நீண்ட நேரம் ஆகியும் தீயணைப்புத்துறையினர் வராததால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், திருச்செங்கோடு கோழிக்கால்நத்தம் சாலையில் பழைய சுடுகாடு முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடிக்கடி ஏற்படும் தீ விபத்து காரணமாக புகை மூட்டத்தால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல் உள்ளிட்ட சுவாசக் கோளாறுகள் ஏற்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மறியல் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்டிஓ சுகந்தி, நகராட்சி துப்புரவு அலுவலர் வெங்கடாசலம் l, காவல்துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு இனி குப்பைகள் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்வதாகவும், தீயை அணைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் எழுத்துப்பூர்வமாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம், விலக்கிக் கொள்ளப்பட்டது. போராட்டம் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு சாலை மறியல் என்பதாலும், அப்பகுதியில் அதிக போக்குவரத்து இல்லாததாலும் போக்குவரத்து ஏதும் பெரிதும் பாதிக்கப்படவில்லை.

Tags

Next Story