சேலத்தில் பூ வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

சேலத்தில் பூ வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டம்

சாலை மறியல்

சேலத்தில் ராஜகணபதி கோவில் அருகே அமைக்கப்பட்ட புதிய பூ மார்கெட்டில் பழைய வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

சேலம், ராஜகணபதி கோவில் அருகே வ.உ.சி. பூ மார்க்கெட் செயல்பட்டு வந்தது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த பூ மார்க்கெட் ரூ.14 கோடியே 97 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டது. கட்டுமான பணி நடைபெற்றதால் தற்காலிகமாக பூ மார்க்கெட் பழைய பஸ் நிலையம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிய கட்டிடம் திறக்கப்பட்டு பல மாதமாகியும் இன்னமும் பூ வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படாமல் இருக்கிறது.

இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாநகராட்சி சார்பில் ஒப்பந்தப்புள்ளி அறிவித்து அதன்மூலம் அந்த ஏலம் தனியார் ஒருவருக்கு ஒப்பந்தம் கொடுக்கப்பட்டது. அங்கு பழைய வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படாமல் புதிய வியாபாரிகளுக்கு ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் முறைகேடாக கடைகளை ஒதுக்கீடு செய்யும் குத்தகைதாரரை கண்டித்து நேற்று முன்தினம் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படாததால் நேற்று 2-வது நாளாக ராஜகணபதி கோவில் அருகே நூற்றுக்கும் மேற்பட்ட பூ வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீஸ் உதவி கமிஷனர் ஹரிசங்கரி தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பூ வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து அவர்கள் அம்மாபேட்டை மண்டல அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர். மேலும் இதற்கு தீர்வு காணாவிட்டால் எங்களது போராட்டம் தொடரும் என்று பூ வியாபாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Tags

Next Story