மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் ஆய்வு
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய பணிகளை ஆய்வு மேற்கொண்டார்
விருதுநகர் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் ஆய்வு செய்யும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று பிற்பகல் வரை தொடர்ந்து பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் மழை பெய்ததையொட்டி, மழையினால் நிரம்பி வரும் நீர்நிலைகளை தொடர்ந்து கண்காணித்து, பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல், உரிய அறிவிப்பு வழங்கி தண்ணீரை வெளியேற்றவும், தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான உதவிகளையும், மழைநீரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரண உதவிகள் வழங்கவும், அனைத்து பகுதிகளிலும் அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தேவையான பாதுகாப்பு உதவிகளையும் செய்து தருவதற்கு அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர், அருப்புக்கோட்டை, காரியாபட்டி, எம்.ரெட்டியபட்டி, நரிக்குடி ஆகிய வட்டாரங்களில் நெற்பயிர்கள் 23,214 ஹெக்டேர் பரப்பிலும், சிறுதானியங்கள் 53,621 ஹெக்டேர் பரப்பிலும், பயறு வகைகள் 5,637 ஹெக்டேர் பரப்பிலும், எண்ணெய் வித்துக்கள் 4,784 ஹெக்டேர் பரப்பிலும், பருத்தி 15,552 ஹெக்டேர் பரப்பிலும், கரும்பு 893 ஹெக்டேர் பரப்பிலும்W ஆக மொத்தம் 1,03,701 ஹெக்டேர் பரப்பில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.
இதில் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக, மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பயிர்சேதம் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் அறிவுறுத்தலின்படி வேளாண்மைத்துறை மூலம் அனைத்து வட்டாரங்களிலும் வேளாண்மைத்துறையினுடைய இணை இயக்குநர், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் நேர்முக உதவியாளர்(விவசாயம்), துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் ஆகியோர் தலைமையில் அடங்கிய குழு அமைக்கப்பட்டு கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.



