குளச்சலில் திருட்டு பைக்கில் விபத்தில் சிக்கிய வாலிபர் பலி .
கன்னியாகுமரி மாவட்டம் திங்கள்நகர் அருகே நெடியங்கோடு பகுதியை சேர்ந்தவர் செல்வமணி மகன் சுரேஷ் குமார் (38).இவர் கடந்த 1-ம் தேதி பைக்கில் சென்று கொண்டிருந்த போது, சைமன்காலனி அருகே எதிரே வந்த ஒரு பைக் அதிவேகமாக சுரேஷ்குமார் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதில் இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டு காயம் அடைந்தனர். சுரேஷ்குமார் மீட்கப்பட்டு குளச்சல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். எதிரே பைக்கில் வந்த வாலிபர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இது தொடர்பான புகாரின் பேரில் குளச்சல் போலீசார் அரசு மருத்துவ கல்லுரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வாலிபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த வாலிபரின் பெயர் விஜயன் என்று மட்டும் கூறிவிட்டு, அவர் மயக்க நிலைக்கு சென்றுள்ளார். அவர் முகவரி குறித்து அறிய முடியவில்லை. ஆனால் அவர் ஓட்டி அந்த பைக் பார்வதிபுரம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி அமலதாஸ் என்பவரின் பைக் எடுப்பது மட்டும் தெரிய வந்தது. இது தொடர்பாக அமலதாஸ் ஆசாரிப்பள்ளம் போலீசில் ஏற்கனவே புகார் செய்துள்ளார். போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று அந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இதனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அவரது உடல் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.