சேலம் அருகே குடிபோதையில் கட்டையால் அடித்து வாலிபர் கொலை
கோப்பு படம்
சேலம் வீராணம் பக்கமுள்ள சின்னனூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் கோபி (29). எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இவரது தம்பி நவீன்குமார் (22), அருகில் உள்ள கோமாளி வட்டம் என்ற இடத்தில் உள்ள பட்டாசு கடையில் வேலை செய்து வருகிறார். அண்ணன்-தம்பி இருவருக்கும் குடிபழக்கம் உண்டு. வேலைக்கு சென்று திரும்பியவுடன் இருவரும் ஒன்றாக அமர்ந்து மதுகுடிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தனர். நேற்று மாலை சின்னனூர் சுடுகாடு அருகில் காலியான இடத்தின் அருகில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு கிடந்த கட்டையை எடுத்த நவீன்குமார், அண்ணன் கோபியின் பின் தலையில் தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். பின்னர் நவீன்குமார் தப்பி ஓடிவிட்டார். வீராணம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோத்னைக்கு அனுப்பி வைத்தனர்.
தலைமறைவான நவீன் குமாரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் மேலும் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.