மாநகராட்சி அதிகாரி என கூறி கடைக்காரரிடம் பணம் வசூலித்த வாலிபர் கைது
கைதான வாலிபர்
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தீபன் (42). இவர் திருப்பூர் அங்கேரிபாளையம் பகுதியில் மளிகை கடையை நடத்தி வருகிறார். நேற்று மாநகராட்சி ஊழியர் என்ற பெயரில் அவரது மளிகை கடைக்கு சென்ற நபர் கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் , கடையின் லைசென்ஸ் காலாவதியாகிவிட்டது என்று கூறி அபராதமாக ரூ.2,000 ரூபாய் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளார்.
அதனை நம்பிய தீபன் ரூ.2000 பணத்தை கொடுத்தவுடன் அந்நபர் ரசீது வழங்கி சென்றுள்ளார். மாநகராட்சி அதிகாரி என்ற நபர் சென்ற பின்பு சந்தேகம் அடைந்த தீபன் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்துள்ளார். அதில் ரசீது போலியானது என தெரிய வந்தவுடன் திருப்பூர் அனுப்பர்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் அடிப்படையில் வந்த அனுப்பர்பாளையம் போலீசார் கடையில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் மாநகராட்சி ஊழியர் என்று வந்த நபர் கூலிபாளையம் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (27) என்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் நந்தகுமாரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரனை நடத்தினர். தீபன் கொடுத்த புகாரின் அடிப்படையில் நந்தகுமார் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். நந்தகுமார் இதே போல் பல்வேறு மளிகை கடை மற்றும் உணவகங்களில் மாநகராட்சி அதிகாரி என்ற பெயரில் வசூல் வேட்டையில் ஈடுபட்டதும் இதற்காக போலி ரசீது தயாரித்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.