உதகை அருகே சாலையில் கம்பீரமாக நடந்து சென்ற புலி
சாலையை கடக்கும் புலி
நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் சுற்று வட்டார வனப்பகுதிகளில் இருந்து புலி, காட்டெருமை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் குடியிருப்பு பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு உதகை எச்.பி.எஃப் பகுதியில் பகல் நேத்திலேயோ பசுவை புலி வேட்டையாடியது. அதன் பின்பு அதே பகுதியில் புலி நடமாடுவதை பொதுமக்கள் கண்டு அச்சமடைந்தனர். தற்போது உதகை அருகில் இருக்கக்கூடிய சோலூர் பகுதியிலும் புலி நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்தப் பகுதியிலும் வளர்ப்பு எருமையை புலி அடித்து கொன்றது. புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்தும் வரும் நிலையில் கிளன்மார்கன் கிராமத்திற்கு செல்லக்கூடிய பிரதான சாலையில் நேற்று இரவு சாலையில் புலி உலா வருவதை அச்சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் பார்த்துள்ளனர். புலி வனப்பகுதிக்குள் சென்று விடும் என வாகன ஓட்டிகள் நினைத்தனர். ஆனால் புலி அச்சாலையில் எவ்வித அச்சமும் இன்றி ஹாயாக வாகன ஓட்டிகளுக்கு வழி விடாமல் நடந்து சென்றது. இதை வாகனத்தில் சென்றவர்கள் அச்சத்துடன் படம் பிடித்தனர். பொதுவாக இரவு நேரங்களில் உலா வரும் வனவிலங்குகள் வாகனங்களின் முகப்பு விளக்கு வெளிச்சத்தை கண்டால் உடனே வனப் பகுதிக்குள் ஓடிவிடும். ஆனால்நேற்று சாலையில் உலா வந்த புலி வாகனம் வருவதைக் கண்டும் முகப்பு வெளிச்சத்தை பார்த்தும் எவ்வித அச்சமும் இன்றி சாலையில் நடந்து வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனை வாகனத்தில் சென்றவர்கள் வீடியோ பதிவு செய்துள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.