தளி அருகே காட்டு யானை தாக்கி வியாபாரி படுகாயம்

தளி அருகே காட்டு யானை தாக்கி வியாபாரி படுகாயம்

யானை தாக்கி காய்மடைந்தாவர்

தளி அருகே காட்டு யானை தாக்கி காய்கறி வியாபாரி படுகாயம் அடைந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள தாவரக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீனிவாசன் (45) இவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். ஸ்ரீனிவாசன் மற்றும் பொதுமக்கள் சிலர் கண்டகானப்பள்ளி என்ற இடத்தில் சாலையில் நடந்து சென்றுள்ளனர்.

அப்போது நொகனூர் காப்பு காட்டிலிருந்து வெளியேறிய 12க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் அப்பகுதியில் புதர் ஒன்றில் மறைந்து நின்றுள்ளது. திடீரென கூட்டத்தில் இருந்த ஒற்றை காட்டு யானை சாலையில் சென்ற பொதுமக்களை துரத்தியுள்ளது. காட்டு யானை துரத்துவதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்து தலை தெரிக்க ஓட்டம் பிடித்துள்ளனர்.

காட்டு யானையிடமிருந்து உயிர் தப்பிக்க ஸ்ரீனிவாசன் அருகில் உள்ள ஒரு புளிய மரத்தில் ஏறி உள்ளார். அப்போது ஒற்றை காட்டு யானை அவரை தும்பிக்கையை கொண்டு அடித்து தாக்கியுள்ளது. இதில் அவர் கீழே விழுந்துள்ளார் அவருக்கு இடுப்பு பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள் சத்தம் போட்டு காட்டு யானையை அங்கிருந்து விரட்டியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து அப்பகுதிக்கு சென்ற வனவர் தேவானந்தன் வனக்காப்பாளர் சுரேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் படுகாயமடைந்த ஸ்ரீனிவாசனை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.

Tags

Next Story