இட நெருக்கடியில் செயல்படும் போக்குவரத்து காவல்நிலையம்

இட நெருக்கடியில் செயல்படும் போக்குவரத்து காவல்நிலையம்

 போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் 

பூந்தமல்லியில் வாடகை கட்டிடத்தில் இட நெருக்கடியில் இயங்கி வரும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்திற்கு சொந்த கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பத்தில், பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம், கடந்த 2006ம் ஆண்டு முதல், வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. ஆவடி காவல் ஆணையரகம் கடந்த 2022ம் ஆண்டு துவங்கியது முதல், ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. ஆவடி, ஆவடி டேங்க் பேக்டரி, திருநின்றவூர், முத்தாபுதுப்பேட்டை, திருமுல்லைவாயல், பட்டாபிராம், செவ்வாப்பேட்டை, வெள்ளவேடு, பூந்தமல்லி, நசரத்பேட்டை, மாங்காடு, பேரூர் எஸ்.ஆர்.எம்.சி., திருவேற்காடு ஆகிய காவல் நிலைய எல்லையில் நடைபெறும் சாலை விபத்து குறித்த வழக்குகள், இந்த காவல் நிலையத்தில் விசாரிக்கப்படுகின்றன.

இந்நிலையில், இந்த காவல் நிலையம் இடநெருக்கடியில் இயங்குகிறது. இதனால், போலீசார் அமர்வதற்கும், வழக்குகளை விசாரிக்க, ஓய்வெடுக்க போதிய இடமில்லை. இதனால், போலீசார் மற்றும் வழக்கு விசாரணைக்காக செல்பவர்களும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், விபத்தில் சிக்கி மீட்கப்பட்ட வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாததால், நெடுஞ்சாலையோரம் உள்ள காலி நிலத்தில் பாதுகாப்பற்ற முறையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. எனவே, இந்த காவல் நிலையத்திற்கு இடவசதியுடன் சொந்தமாக கட்டடம் கட்ட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Next Story