கொடைக்கானல்: கார் மீது கவிழ்ந்த லாரி
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு இன்று காலை வேளையில் திண்டுக்கல் பகுதியில் இருந்து மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி கொடைக்கானலை நோக்கி வத்தலக்குண்டு பிரதான மலைச்சாலையில் லாரி ஒன்று வந்துள்ளது. அதே போல கொடைக்கானலில் இருந்து பெங்களூர் பகுதிக்கு சென்ற சுற்றுலா பயணியின் காரும் பிரதான மலைச்சாலையில் மூலையாறு அருகே சென்று கொண்டிருந்த போது, லாரி வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து காரின் மேல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
காரில் இருந்த பயணிகள் துரிதமாக காரின் கதவை திறந்து வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த விபத்தால் சிறிது நேரம் இந்த சாலையில் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. சம்பவம் குறித்து தாண்டிக்குடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதுடன் லாரியினை அப்புறப்படுத்தும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முதற்கட்டமாக லாரி பிரேக் பிடிக்காத காரணத்தினால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த விபத்தால் இச்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.