திமுகவிற்கு போடும் ஓட்டு தான் மோடிக்கு வைக்கும் வேட்டு-உதயநிதி ஸ்டாலின்!
உதயநிதி ஸ்டாலின்
கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர் “38 தொகுதிகளை முடித்து விட்டு கடைசியாக 39 வது தொகுதியாக கோவைக்கு வந்துள்ளேன்.கணபதி ராஜ்குமாருக்கு நீங்கள் போடும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு எனவும் கோவை தொகுதியில் பத்து ஆண்டுகள் கழித்து உதயசூரியன் சின்னம் போட்டியிடுகிறது.
தலைவரிடம் கேட்டு இந்த தொகுதியில் போட்டியிடுகிறோம் எனவும் குறைந்தது 4 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டு கொண்டார்.
சிங்காநல்லூர்-வெள்ளலூர் சாலையில் நொய்யல் ஆற்று பாலம் கட்டப்பட்டது,சிங்காநல்லூர் குடியிருப்பில் புதிதாக கட்டும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது எனவும் முதலமைச்சர் சொல்வதை நிச்சயமாக செய்வார் என்றார்.
பாஜகவை விரட்டியடித்து இந்தியா கூட்டணி தான் ஆட்சியமைக்கும் என்றவர் அதற்கு ஆரம்ப புள்ளியாக தமிழ்நாடு இருக்கும் எனவும் 39 க்கு 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெல்லும் என்றார்.இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் கேஸ் சிலிண்டரை 500 ரூபாய்க்கு தருவோம் எனவும் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கும் டீசல் 60 ரூபாய்க்கும் தரப்படும் என்றார்.
விரைவில் கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம், செம்மொழி பூங்கா,கலைஞர் நூற்றாண்டு நூலகம்,சாய்பாபாகாலணி பகுதியில் மேம்பாலம், புதிய ரயில் நிலையங்கள்,கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்,ஐஐஎம்,புதிய தொழில் பூங்கா, நகைத்தொழிலுக்கு புதிய சிட்கோ,ஜிடி நாயுடு அறிவியல் மையம் உள்ளிட்டவை அமைக்கப்படும் என்றார்.
மக்கள் வாக்களித்து ஆதரவை பெற்று முதலமைச்சராக உட்கார்ந்தவர் ஸ்டாலின். யார் காலிலாவது போய் விழுந்தாரா? எங்காவது தவழ்ந்து போனாரா? அப்படி யார் முதலமைச்சரானார்? தவழ்ந்து தவழ்ந்து போயி சசிகலா காலை பிடித்து முதலமைச்சராகி அவர் காலையே வாரி விட்டவர் தான் எடப்பாடி பழனிசாமி.
அவர் சசிகலாவிற்கு மட்டும் துரோகம் செய்யவில்லை ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் துரோகம் செய்தவர் எனவும் பாஜக உடன் சேர்ந்தால் ஓட்டுகள் விழாது என தேர்தல் நாடகம் ஆடுவதாகவும் இதனை நம்பி ஏமாந்து விடாதீர்கள் என்ற அவர் 40 க்கு 40 இந்தியா கூட்டணி வெற்றி பெற வேண்டும் எனவும் முதலமைச்சர் கை காட்டுபவர் பிரதமராக வேண்டும் எனவும் கொரோனா காலத்தில் பிரதமர் எதுவும் செய்யவில்லை எனவும் இந்தியாவிலேயே கொரோனா வார்டில் ஆய்வு செய்த ஒரே முதலமைச்சர் ஸ்டாலின் தான் என தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதியின் படி பெட்ரோல் விலை மூன்று ரூபாய் ஆவின் பால் விலை 3 ரூபாயை முதலமைச்சர் குறைத்தார்.மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் திட்டம் தந்தவர் முதல்வர் இதன் மூலம் 27 கோடி மகளிர்கள் கோவையில் இலவச பேருந்து பயணம் செய்துள்ளனர் எனவும் பெண்கள் படிக்க வேண்டும் என புதுமை பெண் திட்டம் மூலம் கல்வி ஊக்கத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. காலை உணவுத் திட்டம் மூலம் 18 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.
கடும் நிதி நெருக்கடியிலும் தகுதியுள்ள 90 சதவீத மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தகுதியுள்ள அனைத்து மகளிருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பத்தாண்டுகளாக ஆட்சி செய்த மோடி தமிழ்நாட்டிற்கு எதாவது செய்துள்ளாரா? என கேள்வி எழுப்பியவர் பேரிடர் நிதியாக ஒரு பைசா கூட அவர் தரவில்லை எனவும் பிரதமரை பெயர் சொல்லி அழைக்காமல் 29 பைசா என அழைக்க வேண்டும் என்றவர் தமிழ்நாடு ஒரு ரூபாய் வரி தந்தால், ஒன்றிய அரசு வெறும் 29 பைசா தான் தருவதாகவும் அதுவே ஒரு ரூபாய்க்கு உ.பிக்கு மூன்று ரூபாயும் பீகாருக்கு 7 ரூபாயும் தருகிறார்கள் யார் அப்பன் வீட்டு காசை எடுத்து யாருக்கு தருவது? என்ற அவர் பிரதமர் கோவைக்கு வந்து ரோடு ஷோ செய்தார் போகும் இடமெல்லாம் ரோடு ஷோ நடத்துகிறார் கடைசியில் மக்களை ரோட்டில் தான் விடுவார் என்றார்.
ஆளுநர் ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட போஸ்ட் மேன் தான் எனவும் தமிழ்நாடு பெயரை மாற்ற வேண்டும் என ஆளுநர் சொல்கிறார்.தமிழ்த்தாய் வாழ்த்திற்கு பதிலாக தேசிய கீதம் பாட வேண்டும் என்பவர் மின்னல் போல எப்போதும் சட்டமன்றத்திற்குள் வருகிறார்,செல்கிறார் ஏன் எனத் தெரியவில்லை.
நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ்,திமுக என பொய் சொல்வார்கள் எனவும் ஜெயலலிதா இருந்தவரை நீட் தேர்வை அனுமதிக்கவில்லை ஆனால் அடிமை கூட்டம் நீட் தேர்வை அனுமதித்ததால் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர் என்றவர் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும் என ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார் எனவும் ராகுல் காந்தி ஸ்வீட் வாங்கி கொடுத்து எல்லோரையும் காலி செய்து விட்டார்.
பாஜக நடத்தும் பொய் பிரச்சாரத்தை ராகுல் காந்தியும் முதல்வர் ஸ்டாலினும் காலி செய்து விட்டார்கள்.29 பைசா தரும் போதே இவ்வளவு செய்யும் முதலமைச்சர் நம்மை மதிக்கும் பிரதமர் அமைந்தால் இன்னும் எவ்வளவு செய்வார்? எனவும் தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் மோடி தமிழ்நாட்டிற்கு வருவார் என்றார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க இதுவரை ஒரு பைசா கூட கொடுக்கவில்லை எனவும் ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் 6 எய்ம்ஸ் மருத்துவமனைகள் கட்டியுள்ளதாக தெரிவித்தார்.
இந்த தேர்தல் மானமிகு சுயமரியாதைக்காரர்களுக்கும்,இரக்கமற்ற சர்வதிகாரி 29 பைசாவிற்கும் நடக்கும் போர் எனவும் போட்டியிட்ட 12 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் கலைஞர் 40 க்கு 40 தொகுதிகளில் ஜெயித்து அவருக்கு பரிசளிக்க வேண்டும் என்றார். திமுகவிற்கு தூக்கம் போய்விட்டதாக சொல்கிறார்கள் 29 பைசாவை வீட்டிற்கு அனுப்பும் வரை தூங்க மாட்டோம்” எனவும் தெரிவித்தார்.