41 கி.மீ தூரத்தை எட்டிய வாக்காளர் விழிப்புணர்வு நடைபயணம்
விழிப்புணர்வு பிரசாரம்
தேனி பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் 100% வாக்களிப்பை பதிவு செய்வதற்காக பல்வேறு விதமான விழிப்புணர்வு பணிகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, ஒவ்வொரு நாளும் 7 முதல் 10 கி.மீ வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபயண பேரணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, முதல் நாள் தேனி-அல்லிநகரம் நகராட்சி பகுதியில் 8 கி.மீ தூரமும், இரண்டாம் நாள் பெரியகுளம் நகரப் பகுதியில் 7 கி.மீ தூரமும், மூன்றாம் நாள் உத்தமபாளைம் பகுதியில் 8 கி.மீ தூரமும், போடிநாயக்கனூர் நகராட்சி பகுதியில் 8 கி.மீ தூரமும், விழிப்புணர்வு நடைபயண பேரணி நடைபெற்றது.
ஐந்தாம் நாளாக இன்று ஆண்டிபட்டி நகராட்சி பகுதியில் 10 கி.மீ தூரம் விழிப்புணர்வு நடைபயண பேரணி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. இப்பேரணி ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடங்கி, எம்.ஜி.ஆர்.சிலை, பாப்பம்மாள்புரம், கொண்டமநாயக்கன்பட்டி, பேருந்துநிலையம், தேவர் சிலை, அரசு மருத்துவமனை வழியாக மீண்டும் வட்டாட்சியர் அலுவலகம் வரை சென்று நிறைவு பெற்றது. இப்பேரணி நாளை பழனிசெட்டிபட்டி, நாளை மறுநாள் கூடலூர், சின்னமனூர், கம்பம் நகராட்சி பகுதிகளிலும், க.மயிலாடும்பாறை பகுதியில் 17.04.2024 அன்றுடன் நடைபயண பேரணி நிறைவு பெற உள்ளது. இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, மாவட்ட தேர்தல் விழிப்புணர்வு முதன்மை அலுவலர் ரூபன் சங்கர் ராஜ், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.