போரூரில் ரூ.12.6 கோடியில் தயாராகிறது சதுப்பு நில பூங்கா: சிஎம்டிஏ

போரூரில் ரூ.12.6 கோடியில் தயாராகிறது சதுப்பு நில பூங்கா: சிஎம்டிஏ

CMDA

போரூரில் 16.6 ஏக்கர் நிலப்பரப்பில், ரூ.12.6 கோடி மதிப்பீட்டில் சதுப்பு நில பூங்கா பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை பெருநகர் பகுதியில் புதிய கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி வழங்கும்போது, 10 சதவீத நிலம் திறந்தவெளி ஒதுக்கீடாக பெறப்படும். இவ்வாறு பெறப்படும் நிலங்கள், உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டு பூங்கா, சிறுவர் விளையாட்டு திடல் அமைக்கப்படும். இதில், ஒரு ஏக்கருக்கு மேற்பட்ட திறந்தவெளி ஒதுக்கீடு நிலங்களில், விளையாட்டு வளாகங்கள் அமைக்க சி.எம்.டி.ஏ., திட்டமிட்டது. இதற்காக, காலி நிலங்களின் விவரங்கள் உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக பெறப்பட்டன. இதன்படி, போரூரில் தனியார் மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில், 16.63 ஏக்கர் திறந்தவெளி ஒதுக்கீட்டு நிலம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிலத்தில், நவீன வசதிகளுடன் விளையாட்டு வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதன் அடிப்படையில், ரூ.12.6 கோடி மதிப்பீட்டில் இங்கு செயற்கை முறையில் சதுப்பு நிலம் உருவாக்கப்பட்டு, மழைநீரை உறிஞ்சி சேமிக்கும் வகையிலான ஸ்பாஞ்ச் பூங்கா அமைக்கப்படுகின்றன. சிறுவர் விளையாட்டு திடல், நடைபயிற்சிக்கான இடம், நீர் நிலைகள், செயற்கை நீரூற்றுகள், அலங்கார தாவரங்கள் என, இந்த பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட உயரதிகாரிகள் இந்த பணிகளை சமீபத்தில் ஆய்வு செய்தனர். இங்கு கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. ஏற்கனவே திட்டமிட்டபடி, இந்த பூங்கா விரைவில் மக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும் என, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story